சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022-ல் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
38 வயதான அவர், கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இடது கை தொடக்க ஆட்டக்காரர். 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார்.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர். ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடி ரன் குவிப்பது இவரது வழக்கம். 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.
“வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது முக்கியமானது. அதனால் தான் நான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய மன நிறைவுடன் விடை பெறுகிறேன். பல மறக்க முடியாத நினைவுகளை என்னுள் கொண்டுள்ளேன்” என தவான் தெரிவித்துள்ளார்.
சதம் விளாசிய பிறகு தவான் அதனை கொண்டாடுவது தனித்துவமாக இருக்கும். பேட்டை உயர்த்துவதோடு தனது தொடைகளை தட்டி கொண்டாடுவார். சமயங்களில் கேட்ச் பிடிக்கும் போதும் இதனை செய்வார். இந்திய கிரிக்கெட்டின் கப்பர் (Gabbar) தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.