சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்.10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் இயக்கியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, அதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.