கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) நாடு முழுவதும் உள்ள முன்னணி வங்கிகளால் அந்தந்த மாவட்ட அளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதே ஆகும். இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான நிதி உதவியும் மற்றும் சிறுதொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதே ஆகும். இந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண்களுக்கான எம்பிராய்டரி மற்றும் துணி ஓவியம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆர்வம் உள்ள நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பிற்கு மொத்தம் 35 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக வெளியில் இருந்து பயிற்றுநர்கள் வருகை புரிந்து, மாணவர்களுக்கு பல பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள்.
மேலும், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் செயல்முறை விளக்கமாக, செய்து செய்து காட்டுவதால் பெண்மணிகள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். இது போன்ற செயல் விளக்கங்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது எனவும், நிச்சயமாக ஒரு சுய தொழில் தொடங்குவதற்கான தன்னம்பிக்கையும் இந்த வகுப்பு அளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் வெளியில் எம்ப்ராய்டரி வகுப்புகள் பயில்வதற்கு 5000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும், ஆனால் இங்கே இலவசமாக வகுப்புகள் மற்றும் அதற்கான உபகரணங்களும் அளித்து பயிற்சி அளிக்கிறார்கள். மூன்று வேளை உணவுகளும் இலவசமாக அளிக்கிறார்கள். இது போன்ற வசதிகளும், வகுப்புகளும் வெளியில் காசு கொடுத்தால் கூட வாங்க முடியாது என பயிற்சிக்கு வந்த மாணவர்கள் கூறினர்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பு மூலம் தொழில் தொடங்குவதற்கான லோன் வசதி போன்றவையும் செய்து தரப்படுவதால், மாணவர்கள் ஆர்வமாக வந்து கலந்து கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.