Last Updated : 29 Mar, 2020 09:59 AM
Published : 29 Mar 2020 09:59 AM
Last Updated : 29 Mar 2020 09:59 AM
தொகுப்பு: தமிழ்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.
ராகி மசாலா இட்லி
நான்கு கப் ராகி மாவைக் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். முக்கால் கப் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கிவிட்டிருக்கும். இந்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, இட்லிகளை ஆறவைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவையுங்கள்.
கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அதில் ஒரு குடைமிளகாய், ஒரு கேரட், ஒரு வெங்காயம், இஞ்சித் துண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள். சிறிதளவு பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள். பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டியெடுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.
FOLLOW US