சென்னை: “மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தன்னுடைய வலியை பதிவு செய்யும்போது அதனை வரவேற்ற கூட்டம், ‘கர்ணன்’ ஆக நின்று சண்டை செய்யும்போது, வன்முறை படம் என விமர்சிக்கிறார்கள். ஒரு படைப்பாளன் மீது மிகப் பெரிய கொடூரத்தை நிகழ்த்துகிறீர்கள். இப்போதும் கூட அவரின் விருப்பத்தின் பேரில் தான் ‘வாழை’ படத்தை இயக்கியிருக்கிறார். நீங்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எடுத்ததாக நான் நினைக்கவில்லை” என இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கமாக பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மாரி செல்வராஜ் மீது இருக்கும் பொறாமையை விட, இயக்குநர் ராம் மீது தான் எனக்கு பொறாமை. இங்கிருக்கும் சினிமா சூழலை இயக்குநர், தயாரிப்பாளர்களிடம் விவாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இலக்கியத்தில் கூட தலித் சினிமாவைப் பற்றி பேச முடிந்தது. ஆனால், தமிழ் சினிமாவிலும், அதில் இருப்பவர்களிடமும் அது குறித்து பேசும் சூழல் இருந்ததா? என்றால் அது கேள்வி தான். நான் திரைப்படம் எடுக்க முடிவெடுத்தபோது, முதலில் அணுக நினைத்த நடிகர் தனுஷ். ஆனால், அவரிடம் எப்படி போய் அணுகுவது என்பது குறித்து நிறைய யோசனை இருந்தது.
பின்பு தயாரிப்பாளர்களை நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால், இயக்குநர் ராம் போல ஒருவரிடம் தான் பணியாற்றியிருந்தால், என்னுடைய முதல் படத்திலேயே நான் பேச நினைக்கும் அரசியலை பகிரங்கமாக பேசியிருப்பேன் என நினைக்கிறேன். ஒரு இயக்குநர் தன்னிடம் இருப்பவரிடம், படிக்க வைப்பது, படிப்பை நோக்கி நகர்த்துவது சாதாரண விஷயமல்ல. அதைத்தாண்டி நிறையவே ராம் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பினார். மாரி செல்வராஜுக்கு ‘மெட்ராஸ்’ படத்தில் மாற்றுக்கருத்து இருந்தது. அது தொடர்பாக என்னிடம் விவாதித்தார்” என்றார்.
மேலும், “மாரி செல்வராஜ் தன்னுடைய வலியை பதிவு செய்யும்போது அதனை வரவேற்ற கூட்டம், ‘கர்ணன்’ ஆக நின்று சண்டை செய்யும்போது, வன்முறை படம் என விமர்சிக்கிறார்கள். ஒரு படைப்பாளன் மீது மிகப் பெரிய கொடூரத்தை நிகழ்த்துகிறீர்கள். ‘பரியேறும் பெருமாள்’ தான் நல்ல படம் என்றால் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மொக்கை படமா? வலியை பதிவு செய்யும்போது ஏற்கும் கூட்டம், திருப்பி எதிர்க்கும்போது அதனை ஏற்க மறுக்கிறது. இதையெல்லாம் உடைத்து தான் மாரி செல்வராஜ், ‘கர்ணன்’ படத்தை இயக்கினார்.
இப்போதும் கூட அவரின் விருப்பத்தின் பேரில் தான் ‘வாழை’ படத்தை இயக்கியிருக்கிறார். நீங்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எடுத்ததாக நான் நினைக்கவில்லை. மாரி செல்வராஜை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எனக்கு பிடித்த இயக்குநர் ஒருவர், அவர் என்னுடைய படத்தை பார்க்கிறார். ஆனால் படத்தை பார்த்துவிட்டேன் என்று கூட சொல்ல மாட்டார். அவரையே பார்க்க வைத்து அவரின் வீடியோவை பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்” என்றார்.