Last Updated:
நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியை ஃபைட்டராக புகழ்ந்து, பஹல்காம் தாக்குதலை இரக்கமற்றது எனக் குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்றுவரும் ‘WAVES’ மாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
அதில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஃபைட்டர், அவர் எந்த ஒரு சவாலை எதிர்கொள்வார். 10 ஆண்டுகளாக இந்தியா மற்றும் உலக அளவில் அவர் அதனை நிரூபித்துள்ளார். பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்ற தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீர் நிலைமையை பிரதமர் தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். அவர் காஷ்மீரில் அமைதியையும், நம் நாட்டிற்குப் பெருமையையும் கொண்டு வருவார்” எனத் தெரிவித்தார்.
நேற்று, லதா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் ‘பாரத சேவா’ தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய காணொளி மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், “இந்த செல்ஃபோன் யுகத்தில் இளைஞர்கள், ஏன் சில பெரியவர்கள் கூட, நம் பாரத நாட்டின் மகோன்னதமான சம்பிரதாயம், அதன் கலாசாரம், அருமை, பெருமையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதற்கான அறிவில்லாமலே சென்றுகொண்டிருக்கிறார்கள். மேற்கத்தியர்கள் அவர்களின் கலாசாரம், சம்பிரதாயத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி, இந்தியாவின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள்.
ஆகவே, நம்முடைய பாரத நாட்டின் மகோன்னதனமான கலாசாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையை கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.