இந்தியாவின் மறக்கப்பட்ட ஹீரோ, பாதியிலேயே அமுக்கப்பட்ட ஹீரோ கருண் நாயர் மகாராஜா டி20 கோப்பை போட்டியில் 48 பந்துகளில் 124 ரன்கள் விளாசி இந்திய அணித் தேர்வுக் குழுவுக்கும் கம்பீருக்கும் வலுவான ‘மெசேஜ்’ அனுப்பியுள்ளார்.
கருண் நாயர் ஒழிக்கப்பட்டது பற்றியும் அவரது தன்னம்பிக்கைப் பற்றியும் நேற்றுதான் நாம் எழுதினோம். அவரை கோலி-ரவிசாஸ்திரி கூட்டணிதான் ஒழித்தது என்று கூறியது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதுதான் நடந்தது. 3 ஆண்டுகள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்கள் சதமே அடிக்காத விராட் கோலி என்று தலைப்புச் செய்திகளாகி ஏகப்பட்ட வாய்ப்புகள் கோலிக்கு வழங்கப்பட்டது உண்மையென்றால், கோலிக்கு இருக்கும் ‘லாபி’ கருண் நாயருக்கோ, மணீஷ் பாண்டேவுக்கோ, ஏன் சர்பராஸ் கானுக்கோ கிடையாது என்பதும் உண்மைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மகராஜா டி20 டிராபி தொடரில் கருண் நாயர் 12 இன்னிங்ஸ்களில் 532 ரன்களை 162.69 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசியுள்ளார். நேற்று அடித்த 40 பந்து சதத்தின் மூலம் மைசூரு வாரியர்ஸ் அணி மங்களூரு ட்ராகன்ஸ் அணியை விஜேடி முறையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த மைசூரு வாரியர்ஸ் அணி கருண் நாயரின் 48 பந்து 124 ரன்கள் விளாசல் மூலம் 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக மங்களூரு ட்ராகன்ஸ் அணிக்கு 14 ஓவர்களில் 166 ரன்கள் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதில் 27 ரன்கள் பின்னிலையில் தோற்றது மங்களூரு.
கருண் நாயரின் பலம் ஸ்வீப் ஷாட்கள், இப்போது சூரியகுமார் ரக ஸ்கூப் ஷாட்களிலும் தேர்ந்து விளாசி வருகிறார், இப்படி ஆடி 27 பந்துகளில் நேற்று அரைசதம் கண்டார். எதிர்முனையில் சமித் திராவிட் (16) ஒரு சிக்சருக்குப் பிறகு வீழ்த்தப்பட்டு பெவிலியன் திரும்பினார்.
கருண் நாயர் 15-வது ஓவரில் பராஸ் குர்பாக்ஸ் ஆரியா பந்து வீச்சில் 2 பெரிய சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். பிறகு நிஷ்சித் ராவ் வீசிய ஒரே ஓவரில் 3 மிகப்பெரிய சிக்சர்கள் மூலம் 40 பந்துகளில் சதம் கண்டார் கருண் நாயர். இந்தச் சதத்தில் 13 பவுண்டரிகள் 9 சிக்சர்களை அடித்தார். பிறகு இன்னிங்ஸை பினிஷ் செய்யும் போது 6, 6, 4, 4, 4 என்று 24 ரன்களை 5 பந்துகளில் விளாசி இன்னிங்சை நிறைவு செய்தார்.
வாசிக்க > நம்பிக்கையே வாழ்க்கை: 303 ரன்களை ஒரே இன்னிங்ஸில் விளாசியும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் மனம் திறப்பு